Pages

சகிப்புத் தன்மையும், ஏற்றுக் கொள்ளலும்.




மீரகத்தில், ஷார்ஜாவில் சர்வதேச புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது.  புத்தகக் கண்காட்சி என்றாலே உற்சாகமாயிருக்கும். படிக்கிறோமோ இல்லையோ, ஆசைக்காவது அஞ்சாறு வாங்கி விடுவதுண்டு. அதிலும், இவ்வருடம் தமிழகத்திலிருந்து பதிப்பகங்கள் தமிழ்ப் புத்தகங்கள் அரங்கு வைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டபோது, போயே ஆக வேண்டுமென்று முடிவு செய்தாயிற்று.

தமிழகப் பிரபலங்களான திருமதி. கனிமொழி மற்றும் நடிகர் - சமூக ஆர்வலர் திரு. பிரகாஷ் ராஜ் ஆகியோர் வருவதாகவும் அறிந்து, விபரம் தேடியதில் திருமதி. கனிமொழி பங்குபெறும்  நவம்பர் 2 - வெள்ளிக்கிழமை அன்றுதான் போக வசதிப்பட்டது.

ஷார்ஜா புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு,  முக நூல் நண்பர்கள் சந்திப்பு ஒன்றையும் நடத்திக் கொண்டோம்.

புத்தகக் கண்காட்சியில், இவ்வருடத்திலிருந்து தமிழ்ப் புத்தகங்களும் கிடைக்குமென்பதால் ஆவலோடு அங்கு முதலில் சென்று பார்த்தோம். விலை அதிகமாக இருந்தது என்றாலும், எதிர்ப்பார்த்ததைவிட கொஞ்சம்  குறைவுதான் என்பதால் கொஞ்சமாக அள்ளிக் கொண்டேன். தமிழ்ப் புத்தகங்கள் இல்லாத காலம்வரை,  கை கொடுத்த ஆங்கிலப் புத்தகங்களைப் புறக்கணிக்கக் கூடாது என்பதால் அதிலும் ஒன்றிரண்டு வாங்கிக் கொண்டேன்.

தமிழ்ப் புத்தக அரங்குகளில், நின்றவர்களெல்லாம் தெரிந்த முகங்கள் போலவே இருந்தன. ஃபேஸ்புக்கில்  அல்லது வலைப்பூக்களில் பார்த்திருப்பேனாயிருக்கும் என்றாலும், போய்ப் பேச்சு கொடுக்கும் அளவு தைரியமில்லை. நான் ரொம்பவே கூச்ச சுபாவம்... அட, நம்புங்க... நிசமாத்தான்!! 

அறிவியல் பதிவாளரான திரு. ராஜ் சிவா தம்பதி டிஸ்கவரி பேலஸ் அரங்கிற்கு வந்த அதே நேரம்தான் நானும் போயிருக்கிறேன். ஆனால், அவர்களைக் கவனிக்கவில்லை, அல்லது அடையாளம் தெரியவில்லை. இதோ அவரது பதிவிலிருந்து எடுத்த இந்த புகைப்படத்தில், அவர்களுக்குப் பின்னால் (பர்தா அணிந்து) நிற்பது நானேதான்!! 😀

 

அங்கே ஒன்று, இங்கே இரண்டு, அதிலே மூணு என்று கொஞ்சமாகத்தான் புத்தகங்கள் வாங்கியது போல இருந்ததது. ஆனால், கடைசியில் கணக்குப் பார்த்தால், பட்ஜெட் தாறுமாறாக எகிறியிருந்தது தெரிய வந்தது. ஃபைனான்ஷியல் டிபார்ட்மெண்ட்டில் அப்ஜெக்‌ஷன் வருமோ என்று பயம் வந்தாலும்,  நாம என்ன வாரம் ஒரு சேலை, மாசம் ஒரு கைப்பை, பதினைஞ்சு நாளுக்கு ஒரு செருப்புன்னு ஆன்லைன் பர்ச்சேஸ்ல  வாங்கிகிட்டா இருக்கோம்...  அப்ஜெக்‌ஷன் சொல்லித்தான் பாக்கட்டுமே என்று ஒரு தகிரியம் வந்தது.

டுத்ததாக, திருமதி. கனிமொழி நிகழ்ச்சிக்குப் போனோம். கடந்த வருடம் திரு. ஸ்டாலின் வந்தபோது இருந்த கட்டுக்கடங்காத கூட்டமோ, பரபரப்போ இம்முறை இல்லை. 
நிகழ்ச்சிகள் ஆரம்பித்ததும், நாங்க சக பதிவரான திருமதி.யாஸ்மின் செய்து கொண்டு வந்த கேக்கை, ஃப்ளாஸ்க்கில் கொண்டு வந்த ப்ளாக் டீயுடன் ரசித்து ருசித்தோம்!!

உயர்வு-தாழ்வு பேதம் குறித்துப் பேசிய திருமதி. கனிமொழி, “Tolerance" என்ற பதமே தவறு. Tolerance என்பது நமக்குப் பிடிக்காத ஒன்றைச் சகித்துக் கொள்வது. நம்மோடு ஒன்றாக இணைந்து வாழ்பவர்களை நாம் சகித்துக் கொள்ளக் கூடாது; மாறாக, ஏற்றுக் கொள்ள வேண்டும் - Acceptanceதான் தேவை என்று கூறினார்.
தொடர்ந்து தனது உரையில், தாழ்ந்த குலத்தில் பிறந்த காரணத்தால், ஏகலைவனின் கட்டை விரல் துரோணாச்சாரியாரால் வெட்டப்பட்ட கதையைச் சொன்னார். அர்ஜுனனைவிட சிறந்த வில்லாளி யாரும் இருக்கக்கூடாது என்று, எந்த பாண்டவர்களுக்காக ஏகலைவனின் விரலை வெட்டச் செய்தாரோ, அதே பாண்டவர்களின் துரோகத்தாலேயே துரோணாச்சாரியார் வீழ்த்தப்பட்டார் என்று அவர் கூறிய தகவல் எனக்குப் புதிது.
அந்தச் சமயம் எனக்கு அத்வானிஜி நினைவில் வந்து சென்றார்!!

வர் பேசி முடித்த பின்னர், வெளியே நடந்து வந்து, புல் தரையில் அமர்ந்து ஒரு மீட்டிங் போட்டோம். எல்லாரும் வாங்கிய புத்தகங்களைப் பார்த்து பரிமாறிக் கொண்டோம். ஒருவர் வாங்கிய ஒரு சில புத்தகங்களையே மற்றவர்களும் வாங்கியிருந்தோம்!! அது தவிர பிறர் வாங்கிய மற்ற புத்தகங்களைப் பார்த்து ஏக்கமும் பட்டுக் கொண்டோம்.

அமீரகத்தில் நமது நட்புகளிடையே ஏன் புத்தகங்களைச் சுற்றுக்கு விடக்கூடாது என்றும் கேட்டேன். நல்ல ஐடியாதான், ஆனால் எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை. மேலும், நான் வாங்கிய புத்தகங்களையே அடுத்த வருடத்துக்குள் இன்ஷா அல்லாஹ் படித்து முடிப்பேனா என்று தெரியாத நிலையில், மற்றவர்களின் புத்தகங்களையும் வாங்கி வைத்து என்ன செய்ய? 

அதற்குப் பின்னர் எங்கள் சந்திப்பில் கலந்துகொண்ட சகோதரர் ஷபீர் அவர்கள்,  தனது இரு மகள்களையும் மருத்துவம் படிக்க வைத்திருக்கிறார் என்றறிந்து உற்சாகமானேன். அதில் ஒரு மகள், மருத்துவ மேற்படிப்புக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்!! பாரகல்லாஹு லஹும்!!

பெண்களைப் படிக்க வைப்பதை ஊக்குவிக்காத - அதுவும் மருத்துவம் படிக்க வைப்பதை பல காரணங்கள் சொல்லி தடுக்கும் ஒரு சமூகத்தில், இப்படி ஒரு தந்தையா என்று நினைச்சு நினைச்சு ஆச்சரியப்பட்டும், ஆனந்தப்பட்டுகிட்டும் இருக்கேன் இப்பவரை!! அல்ஹம்துலில்லாஹ்!!



Post Comment

0 comments: