முதலிலேயே டிஸ்கி போட்டுக்கிறேன்: இந்த எனது பதிவு, திருமணங்கள் குறித்த ஒரு அலசல் மட்டுமே. இதன் மூலம் நான் பால்ய விவாகம், வரதட்சணை, பெண்ணடிமைத்தனம் போன்ற எதையும் நான் முன்பும் ஆதரித்ததில்லை; இப்பவும் ஆதரிக்கவில்லை என்பதைக் கொஞ்சம் ஸ்ட்ராங்காவே சொல்லிக்கிறேன்!!
(செட்டில் ஆயிட்டோம், ஆனாலும் வீட்டில கல்யாணப் பேச்சு எடுக்க மாட்டேங்கிறாங்களேன்னு புலம்புறவங்க இந்தப் பதிவை வீட்டில காட்டுங்க, ஒரு வேளை வொர்க் அவுட் ஆகலாம்!!)
இப்ப கொஞ்ச வருடங்களாகவே இளைஞர்களிடம் நிலவி வரும் டிரெண்ட் என்னன்னு பாத்தோம்னா, படித்து முடித்தவுடன் முதலில் வேலை, அப்புறம் ஒரு வண்டி, நல்ல ஏரியாவில ஒரு வீடு, கொஞ்சம் பேங்க் பேலன்ஸ் இப்படி செட்டில் ஆனபிறகுதான் கல்யாணம் அப்படிங்கிறதுல உறுதியா இருக்காங்க. ஆண்கள் மட்டுமில்லை, பெண்களும் அப்படித்தான் இருக்காங்க. இக்கால நிலையற்ற உறவுகள் இந்தக் காரணங்களை நியாயப்படுத்துகின்றன.
அதிலயும் இப்ப அநேகமா எல்லாருமே ஒரு முதுநிலைப் பட்டமும் வேலைக்கு ரொம்ப உதவும்னு படிக்கிறதால அதுக்கும் சில வருடங்கள் பிடிக்கிறது. முதுநிலை படிப்புக்குத் தேவையான நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதற்கும் ஒரு குறிப்பிட்ட காலம் பிடிக்கிறது. அப்படி, இப்படின்னு ஒரு 28, 29 வயசில கொஞ்சம் செட்டில் ஆனாலும் இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருப்பாங்க. இதில யூ.எஸ்., கனடா, ஆஸ்திரேலியான்னு ஏதாவது ஒரு சிட்டிஸன்ஷிப் வாங்கினப்புறம்தான் கல்யாணம் பண்ணுவேன்னு அடம் புடிக்கிறவங்களும் இருக்காங்க.
இப்படி எல்லாம் சரியா வந்து, கல்யாணம் பண்ணும்போது, ஆணுக்கு 30 வயது தாண்டிவிடுகிறது. பெண் முப்பது வயதைச் சில வருடங்களில்/மாதங்களில் எட்டிப் பிடிக்கிறவர்களாக இருப்பார்கள். மணமக்களின் பெற்றோர்களோ 60+ வயதுகளில் இருப்பார்கள்.
ஒரு பதினைஞ்சு, இருபது வருஷத்துக்கு முன்னாடி பாத்தோம்னா, ஆண்கள் படிச்சு ஒரு வேலை கிடைச்சவுடனேவும், பெண்கள் படிச்சு முடிச்சவுடனேவும் கல்யாணம் பண்ணிகிடுவாங்க. கல்யாண வாழ்க்கையை தங்கள் வருமானம் மற்றும் பெற்றோர் ஆதரவுடன் நடத்தி வந்தனர். இந்த கல்யாணங்களில் மணமக்களின் பெற்றோரும் நடுத்தர வயதைத் தாண்டி இருப்பார்கள். பெண்ணும் வேலை பார்த்தால் குழந்தை வளர்ப்பில் மிகவும் உதவியாக இருப்பார்கள்.
அதுக்கும் முன்னாடி, அதாவது ஒரு 30-40 வருஷம் முன்னாடி போனா, ஆண்கள் கல்லூரியில படிச்சுகிட்டிருக்கும்போதும், பெண்கள் 15-18 வயசிலயும் கல்யாணம் பண்ணினாங்க. ஆணின் கல்யாணத்தின் பின் உள்ள வாழ்க்கைக்கு அவரது பெற்றோர் ஆதரவாக இருந்தனர். ஆண்களுக்கு வேலை கிடைத்து செட்டில் ஆகும்போது பெற்றோர் நடுத்தர வயதைக்கூட எட்டியிருக்கமாட்டார்கள். இந்த கல்யாணங்களில் பொதுவா ஆணுக்கே 20 வயதுக்குள்தான் இருக்கும். அவனின் படிப்புச் செலவு, மனைவி, குழந்தைகளுக்கான செலவு எல்லாமே அவனது குடும்பத்தினரால் (சில சமயம் பெண் வீட்டாராலும்) அளிக்கப்படும். அவன் வேலையில் சேரும்போது குழந்தைகள் பள்ளி செல்லும் வயதில் இருப்பார்கள். (சில வீடுகளில் ஒரே நேரத்தில் அப்பா கல்லூரியிலும், மகன் பள்ளியிலும் படித்தும் இருக்கிறார்கள்).
ஒன்றிரண்டு தலைமுறை முன் பார்த்தோமானால், பேரன்/பேத்திகளின் திருமணத்தை முடிவு செய்து, நடத்தி வைப்பதுகூட தாத்தாவாகத்தான் இருக்கும். தாய், தந்தைக்கு அவ்வளவு அதிகாரம்/ சுதந்திரம் இருக்காது.அந்தளவு கூட்டுக்குடும்பம் சக்திவாய்ந்ததாக இருந்தது.
அதாவது இவ்விரண்டு கால கட்டங்களிலும் பருவ வயது வந்தவுடன் திருமணம் செய்யும் வாய்ப்பு இருந்தது. அதனால் தவறுகள் குறைவாகவே இருந்தன. தவறுகள் என்று நான் சொல்வது, அறியாப்பருவக் காதல், கல்யாணத்திற்கு முன்பே தவறான உறவு போன்றவற்றை. இந்த வயதில் எதிர்பாலர் குறித்த ஈர்ப்பு, ஆர்வம் அதிகம் இருக்கும். அதை ஈடுகட்டத்தான் அந்த காலத்தில் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர் போலும். பின், அதனால் பாதிப்புகள் அதிகமாக விளையத் தொடங்கியதால் (பால்ய விதவைகள், பிரசவ மரணங்கள் போன்றவை) வரும் காலங்களில் திருமண வயது அதிகரிக்கப்பட்டது.
அதன்பின்னரும் வரதட்சணை, மாமியார் கொடுமை, இளவயதுப் பிரசவங்கள் போன்ற பல காரணங்களால் பெண்கள் அதிகமாகப் பாதிப்புக்குள்ளாகியதால், படித்து ஒரு பட்டம் பெற்ற பின்னரே பெண்கள் திருமணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இக்கால கட்டங்களில் நகரக் குடியேற்றம் அதிகரித்த காரணத்தாலும் கூட்டுக்குடும்ப முறை சிதைய ஆரம்பித்தது.
முன்னர் ஒரு பெண் திருமணத்திற்குப் பின் பிரச்னை ஏற்பட்டு பிறந்த வீட்டுக்குத் திரும்பி வந்தால் ஆதரிக்க பெற்றோரும், சகோதரர்களும் தயாராய் இருந்தனர். கூட்டுக்குடும்ப முறை குறைந்ததில் இதற்கும் பாதிப்பு ஏற்பட்டது. திருமண வயது அதிகரித்ததால் பெற்றோரும் வயதானவர்களாக ஆகி, மகனின் ஆதரவில் இருக்கும்போது, மண வாழ்விழந்த மகளைச் சரியாகப் பராமரிக்க முடியாமல் தவித்தனர். ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசியில் பெற்றோரைப் பராமரிப்பதே சிரமமாகிப் போன நிலையில் மகன்கள், சகோதரிகளையும் பராமரிக்கத் திணறினர். இம்மாதிரிச் சூழ்நிலைகள் பெண்கள் வேலைக்குச் சேர்ந்து காலூன்றிய பிறகே திருமணம் செய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்திற்கு வலுவேற்றின. இது பெண்களின் திருமண வயதை இன்னும் அதிகப் படுத்தியது.
ஆண்களின் நிலையைப் பார்த்தால், விலைவாசி உயர்வு, குடும்பப் பொறுப்புகள் கூடிப்போனது, வரதட்சணை எதிர்ப்பு ஆகியவை அவர்களின் பணத்தேவையை அதிகப் படுத்தின. அதனால் அவர்களும் மேலே சொன்னமாதிரி படிப்பு, மேற்படிப்பு, வேலை, அயல்நாட்டுக் குடியுரிமை என்று திருமண வயதை தங்கள் பங்குக்கு ஏற்றிக் கொண்டார்கள்.
தற்போதைய நிலவரப்படி இந்தியர்களும் வெள்ளைக்காரர்களைப் போல் வயதான பிறகு திருமணம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். கேட்டால், கொஞ்ச நாளாவது லைஃபை எஞ்ஜாய் செய்ய வேண்டும், அதற்குள்ளே திருமணமா என்கிறார்கள். ஆனால், இந்த வயதில் வரும் உடல் வேட்கையை அடக்க முடியாமல் தவறான வழிகளில் போகிறார்கள். சிலர் லிவிங் டுகெதர் என்ற முறையிலும் வாழ்கிறார்கள்.
இவ்வாறு திருமணத்தை இக்காலத்தில் இருபாலரும் வெறுப்பதன் காரணமென்ன? “Afraid to take responsibilities" அதாவது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதால் வரும் பிரச்னைகளை எதிர்கொள்ள அச்சம், அதிவசதியான வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம், வறுமையை எதிர்கொள்ள பயம் போன்ற பல காரணங்களைக் கூறலாம். சிலரிடம் கேட்டால் சொல்வார்கள், ”நானும், என் குடும்பமும் வசதியாக இருக்கவேண்டும். என் பிள்ளைகளையும் வசதியாக வளர்க்க வேண்டும். நான் பட்ட கஷ்டங்கள் படக்கூடாது. அதற்குத் தேவையான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்ட பின்னர்தான் திருமணம் பற்றி யோசிக்க வேண்டும்” என்று. நல்ல முறையில் குடும்பத்தைப் பேண நினைக்கும் பொறுப்பானவர் என்ற முறையில் அவரின் எண்ணம் சரியே.
ஆனால், இதன் உள்ளர்த்தம் என்ன? வாழ்வின் அடிப்படைத் தேவைகள் பெறுமளவு சம்பாதித்தால் போதாது. நவீன காலத்தின் தேவைக்கதிகமான வசதி வாய்ப்புகள் எல்லாம் பெற்று, கண்ணில் பட்டதெல்லாம், நினைத்ததெல்லாம் வாங்குமளவு செல்வம் பெற்றிருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். தாங்கள் அப்படி இருப்பது மட்டுமல்லாமல், தங்கள் பிள்ளைகளையும் அவ்வாறே வளர்க்கின்றனர். திரு. கதிர் அவர்கள் தன் பதிவில் கூறியிருந்தது போல பசிக்கு உண்ணும் வாழ்வு இல்லை இவர்களது. இந்த மனப்பான்மையில் வளரும்போது ஒருவேளை பிற்பாடு வறுமையை, பசியை எதிர்கொள்ள வேண்டி வந்தால் துவண்டு போகிறார்கள். இந்நிலையில் குடும்பத்தோடு தற்கொலை முடிவு எடுக்கவும் செய்கின்றனர் சிலர்.
முந்தைய காலங்களில் ஒரு குடும்பத் தலைவர் தன் வாழ்நாளில் சொந்தமாக ஒரு வீடு கட்டி முடிப்பதே தன் லட்சியமாகக் கொண்டு, சிறுகச் சிறுகச் சேர்த்து வருவார். மனைவி, மக்கள் என்று மொத்தக் குடும்பமுமே தங்களால் இயன்ற வரை தங்கள் ஆசைகளை அடக்கிக் கொண்டு அந்தக் கனவு நிறைவேற உறுதுணையாயிருப்பர்.
யோசித்துப் பாருங்கள், நம் காலத்தில் ஒரு பென்சிலோ, பேனாவோ வாங்க நாம் நம் பெற்றோரிடம் எவ்வளவு தவம் இருந்திருப்போம்? ஒரு மாசம் (??!!) கூட ஆகல, அதுக்குள்ள அடுத்ததா? என்பது போன்ற எத்தனைப் புலன் விசாரணைகளுக்குப் பின் நமக்கு அந்தப் பொருள் சாங்ஷன் ஆகும்? அதில் கிடைக்கும் மகிழ்ச்சியிலேயே அப்பொருளைப் பொன் போலப் பாதுகாப்போம். ஆனால் இன்று, நம் பிள்ளைகளுக்கு, முதலிலேயே 12 பென்சில்கள் அடங்கிய பெட்டிகள் சிலவற்றை வாங்கிக் கொடுத்து விடுகிறோம். வலியில்லாமல் கிடைப்பதால், அவர்களும் அதை முடிந்தவரை வீணாக்குகிறார்கள். ஒரு நாள் உறவினர் வீட்டுப் பெண்ணின் பாக்ஸில் பார்த்தேன், ஏழெட்டு பென்சில்கள். அதுமட்டுமல்ல, வீட்டில் தடுக்கி விழுந்த இடமெல்லாம் பென்சில்கள் மற்றும் இதர பொருட்கள்!! (இதில் பாதிக்கப்படும் சுற்றுச்சூழல் பற்றி எழுத ஆரம்பித்தால், அது ஒரு தனிப் பதிவு அளவு ஆகிவிடும்.) ஆக, செல்வச் செருக்குடன் செல்லமாகவும் வளர்க்கப்படுவதால் குணம் மாறும் குழந்தைகள் லேட் மேரேஜின் ஒரு விளைவு எனலாம்.
பணம்/ சொத்து சேர்ப்பதற்காகத் திருமணத்தைத் தள்ளிப்போடும் இளைஞர்களில் இயற்கையான தமது உடல் வேட்கையை அடக்க முடியாதவர்கள் சிலர் என்ன செய்வார்கள்? நெட் சாட்டிங், தவறான தொடர்புகள், முறையற்ற உறவுகள், கேர்ள் ஃபிரெண்ட், லிவிங்க் டுகெதர், உடல்நலத்தைக் கேடாக்கும் பழக்கவழக்கங்கள் என்று பல வழிகளில் சீரழிகிறார்கள். இது மற்றொரு விளைவு!!
ஒருவழியாகக் கல்யாணம் செய்த பிறகும், குழந்தையைக் கவனிக்க ஆளில்லை, பிரமோஷன் வர்ற சமயம் என்பது போன்ற காரணங்களால் குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட்டு், கிட்டத்தட்ட பேரன், பேத்தி எடுக்கும் வயதில் பிள்ளைகள் பெற்றுக்கொள்வதால் வரும் ”தலைமுறை இடைவெளி” (”ஜெனரேஷன் கேப்”) வேறு!!
என்னதான் சொல்ல வர்றே, குழப்பாம சீக்கிரம் சொல்லுங்கறீங்களா? பெரியவர்கள் சொல்வார்கள், “அதது காலாகாலத்தில் நடக்க வேண்டும்” என்று. அதுபோல, ஆணோ, பெண்ணோ, அந்தந்த வயதில் திருமணம் செய்துகோண்டு, வசதிகளை மேம்படுத்தும் வழிகளை குடும்பத்தினரின் உறுதுணையோடு செய்வது நல்லது. சரிதானே?
வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய இளமைக் காலத்தில் திருமணம் செய்துகொண்டு, நல்ல உடல்நலத்துடன் இருக்கும்போதே குழந்தைப் பேறு அடைவது நல்லது. சிறு வயதில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகமாக இருக்கும். இளவயது என்றால் குழந்தை பெறுவதில் அதிகச் சிரமும் இருக்காது. இன்று குடும்பநல கோர்ட்டுகளிலும், குழந்தைப்பேறு மருத்துவமனைகளிலும் இருக்கும் கூட்டங்களும் இதைத்தானே சொல்லாமல் சொல்லுகின்றன!!
நாம் மட்டுமல்ல, நம் பெற்றோர் திடகாத்திரமாக இருக்கும்போதே குழந்தை பெற்றுக் கொண்டால், குழந்தை வளர்ப்பில் அவர்களால் ஆதரவாக இருக்க முடிவதுடன், பேரக்குழந்தைகளுடன் சுவாரசியமாகப் பொழுதுபோக்க முடியும். அதோடு, நமது பேரக்குழந்தைகள் வரும்போது நாமும் அவர்களுக்கு ஈடுகொடுக்க இளவயதினராக இருக்கலாமே!! முன்னெல்லாம், “நான் எங்க தாத்தா, பாட்டிட்டதான் வளர்ந்தேன்”, “ஒவ்வொரு லீவுக்கும் நான் தாத்தா, பாட்டிட்ட போயிடுவேன்” என்றெல்லாம் நிறையபேர் கூறக் கேட்டிருப்போம். நம்மை வளர்த்தெடுக்குமளவு அவர்கள் அதிக வயதானவராக இல்லாமல், ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால், இப்ப நம் பிள்ளைகளை சில நாட்கள் கூட நம் பெற்றோருடன் தனியாக விட மிகவும் யோசிக்கிறோம், “அப்பாவுக்கு ஏற்கனவே பிரஷர் இருக்கு; அம்மாவுக்கு மூட்டுவலி உண்டு. இவனை எப்படி தனியா சமாளிப்பாங்க” என்றெல்லாம் கவலைப் படுகிறோம்.
யோசிங்கப்பா!!
கொசுறுத் தகவல்: தமிழ்நாட்டில் திருமணமாகாத ஏழைப்பெண்களுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.20,000 வழங்கப்படுகிறது. யு..ஏ.இ.யில் இதேபோல திருமண உதவித்தொகை 70,000 திர்ஹம் (கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய்) வழங்கப்படுகிறது. ஆனால், ஏழைப்பையன்களுக்கு!!
Post Comment