ராஜஸ்தான் ஹவா மஹல் - இதன் இன்னொரு பெயர், “பிங்க் மஹல்”. பேருக்கேத்த மாதிரி பிங்க் கலர்ல இருக்கிற இத வச்சுத்தான் ஜெய்ப்பூருக்கே “பிங்க் சிட்டி”னு பேர் வந்தது. இந்த மஹல், அப்போதைய அரசக் குடும்பத்துப் பெண்கள் நகரை வேடிக்கை பார்க்கப் பயன்படுத்துவதற்காகக் கட்டப்பட்டது. புராதனச் சின்னமான இக்கட்டிடம் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் இந்நகரில் நடந்த NRIக்களின் தினமான ‘ப்ரவாசி பாரதிய திவஸ்”க்காக இந்நகரை அழகுபடுத்தினர். அப்போது, புறா எச்சங்களும் தூசியுமாய் இருந்த ஹவா மஹலையும் சுத்தம் செய்ய, தீயணைப்புக் குழாயால் நீரை வேகமாகப் பீச்சியடித்ததில், அதன் வெளிப்புறச் சுவரின் சில இடங்களில் காரை பெயர்ந்துவிட்டதாம்.
ஒரு புராதனக் கட்டிடத்தின்மீது இப்படிக் கடுமையான அழுத்தத்தில் நீரை அடித்துச் சுத்தம் செய்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொல்பொருள் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் இதுகூடத் தெரியாத குழந்தைகளா என்று ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.
______________
காற்று மாசுபடுவதைத் தடுப்பதற்காக 27 ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான EU, கடந்த ஜனவரி முதல் தம் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் விமான நிலையங்களைப் பயன்படுத்தும் விமானங்கள் வெளியிடும் புகையில் உள்ள நச்சுப்பொருளான கார்பன் அளவைப் பொறுத்து "Carbon tax" கட்ட வேண்டும் என்று EU சட்டம் நிறைவேற்றியுள்ளதற்கு, பல்வேறு விமான நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதை ஐரோப்பிய யூனியன் கண்டுகொள்ளாததால், விமான நிறுவனங்கள் இக்கட்டணத்தை விமான டிக்கட்டுகளில் ஏற்றி, பயணிகளின் தலையில் கட்டிவிட்டன!!
உலகில் வாகனப் பெருக்கம் அதிகமாகிவிட்டதன் ஒரு விளைவு இந்த “கார்பன்” emissions. இவை மிகக் கெடுதலானவை என்பதால், இதைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டிய சூழலில் இருப்பதால் இதுபோன்ற நடவடிக்கைகள் அத்தியாவசியமாகி வருகின்றன. இதற்கான இன்னொரு நடவடிக்கையான "Carbon capture and storage" குறித்து WFES - 2011 பதிவில் முன்பே பார்த்திருக்கிறோம்.
______________________
இங்கே அமீரகத்தில் சமீபகாலமாக, பூட்டியிருக்கும் வீட்டில் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் பாதிக்கப்படுபவை குறிப்பாக இந்தியர்களின் வீடுகளே மிகமிக அதிகம். அதுகுறித்து அமீரகக் காவல் துறை தலைவர் பேசும்போது குறிப்பிட்டதாக செய்தியில் படித்த விஷயத்தைப் பகிரவேண்டும் என்று வெகுநாட்களாக நினைத்திருந்தேன். ஆனால், அந்தச் செய்தியின் லிங்கைச் சேமித்துவைக்க மறந்துவிட்டதால், தற்போது தேடியபோது ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை அறியக் கிடைத்தது.
அதாவது அமீரகத்தில் மட்டுமல்ல, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளிலும்கூட, இந்தியர்களின் வீடுகளே பெரும்பாலும் திருடர்களின் தாக்குதலுக்கு உள்ளாவதாகத் தெரிய வந்தது. காரணம், ஒன்றுதான்!! அதாவது, பெரும்பான்மையோர் தம் வீட்டுக்கதவுகளில் தாம் இந்தியர் என்று தெரியும் விதமான அடையாளங்களைச் செய்கின்றனர். அதாவது, கதவில் ஸ்வஸ்திக் வரைவது, மாவிலைத் தோரணங்கள் கட்டுவது, கோலங்கள் போடுவது போன்றவை மூலம் அது இந்தியர்களின் வீடுகள் என்று உறுதியாகத் தெரிய வருகிறதாம்.
சரி, அதனால் என்ன என்று தோன்றும். இந்தியர்களுக்குத்தான் நகைப் பற்று அதிகம். அதுவும் 22 காரட் நகைகளை இந்தியர்கள் மட்டுமே வாங்குவர். ஆங்கிலேயர்கள் 12 காரட், 14 காரட் நகைகளே பெரும்பாலும் வாங்குவர். அதன் மதிப்பு 22 காரட்டுக்கு முன் ஒன்றுக்கும் தேறாது. அதனால்தான்!!
தொடர்புடையச் சுட்டிகள்:
1. http://aathimanithan.blogspot.com/2012/01/blog-post_08.html
2. http://uberdesi.com/blog/2009/08/12/burglarizing-ganesh/
3. http://www.dailymotion.com/video/xhohy3_homes-with-religious-symbol-meaning-good-targeted-by-burglars_news
___________________________
பெரியவனின் பள்ளியில் குடியரசு தினத்தையொட்டி, வகுப்புகளில் சில அலங்கார வேலைகளைச் செய்யச் சொல்லியிருந்தனர். இவன் வகுப்பில், இவன் பொறுப்பெடுத்துச் சகமாணவர்களிடம் காசு வசூலித்துச் செய்தான். அப்போது வேலைகளையும், அதற்கான பணத்தையும் மாணவர்களோடு வேலைகளைப் பகிர்ந்து செய்யவேண்டி வந்ததில், பலரும் காசையும், வாங்கிய பொருட்களையும் ஆட்டையைப் போடுவதிலேயே குறியாக இருப்பதைப் பார்த்து நொந்துபோய் இருக்கிறான். “நீ தந்த காசைப் பையில் வச்சிருந்தேன். வகுப்பில் வச்சுக் காணாமப் போயிடுச்சு. அதனால் நான் பொறுப்பில்லை”; “வாங்கின ரிப்பனை வீட்டுல வச்சிருந்தேன்; தம்பி எடுத்துக் கிழிச்சிட்டான். ஒண்ணும் செய்ய முடியல”; “இன்னிக்கு லீவாயிருந்தாலும், உனக்கு உதவத்தான் வந்தேன், அதனால பெப்ஸி, சிப்ஸ் வாங்கக் காசு கொடு” - இதெல்லாம் சொல்லப்பட்டச் சில காரணங்கள். எதிர்கால இந்தியா!!
இதை மிஞ்சுற மாதிரி இன்னொன்ணு நேத்து கேள்விப்பட்டேன். திருச்சியில் முதலாமாண்டு பொறியியல் தேர்வில் மூன்று பாடங்கள் ஃபெயிலானதால் மாணவன் தற்கொலை செய்துகொண்டான். அதுவல்ல விஷயம் (!!). அவன் இறந்த சில நிமிடங்களில், அவனின் மொபைல் ஃபோன் காணாமல் போய்விட்டதாம்!!
__________________
”நண்பன்” படத்தில் எஸ்.ஜே. சூர்யாக்குப் பதிலாக விஜய் படிச்சு, பரிட்சை எழுதுவதை ரசித்துப் பாராட்டினோம். கல்வி முறை மாற வேண்டும் என்றெல்லாம் வீராவேசமாக வாதாடுகிறோம். ஏங்க, புதுச்சேரி மினிஸ்டரும், படிக்கக் கஷ்டமாயிருக்கப் போய்த்தானே ஆளு வச்சு பரிட்சை எழுதினார்? இத ஏன் யாரும் அந்தக் கோணத்துல யோசிக்கவேயில்லை? பாவம் அவரு!! :-)))))
________________
![]() |
கடலூர்!! |
நம்ம ஊர்ல சிலர், அவங்க விளைபொருட்களின் கொள்முதல் விலையைக் கூட்ட வேண்டும்னு போராட்டம் பண்றாங்க. உதாரணமா, பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தணும்; அரிசிக்கும் அதேபோலன்னு. எல்லாம் சரிங்க. ஆனா அதுக்கு ஏன் அந்தப் பாலையும், நெல்லையும், அரிசியையும் ரோட்டில கொட்டுறீங்க? முன்னெல்லாம் சினிமாவில் சண்டைக் காட்சியில்தான் இப்படி அநியாயம் பண்ணுவார்கள். இப்ப நிஜத்திலேயே!! :-((((
|
Tweet | |||