"102 Not Out" என்று வித்தியாசமான பெயரில் அந்தப் படத்தின் விளம்பரத்தைப் பார்த்ததும் கிரிக்கெட் பற்றியதாக இருக்குமோ என்று நினைத்துத் தவிர்த்துத் தாண்டிப் போக நினைத்த ”முன்னாள் கிரிக்கெட் பைத்தியமான” என்னை, அதில் இருந்த நடிகர்கள் அமிதாப் மற்றும் ரிஷி கபூரின் புகைப்படங்கள், கதை என்னவா இருக்கும் என்று ஆவல் கொள்ள வைத்தது.
இவுங்க ரெண்டு பேரும் ப்ராட்மேன் காலத்துல கிரிக்கெட் விளையாடியதைக் கதையாகச் சொல்லிருப்பாங்களோ என்றும் பயம் வந்தது. இருந்தாலும் ஏனோ இந்தப் படத்தின்மீது ஒரு தனி கவனம், ஆவல் இருந்துகொண்டே இருந்தது. (எனக்கும் வயசாகிக் கொண்டு வருவதும் ஒரு காரணமா இருக்குமோ? 😱 😆) பார்க்க வேண்டிய படங்கள் என்ற லிஸ்ட் எழுதி வைத்திருந்த ஒரு குயர் நோட்டின் கடைசி பக்கத்தில் இந்தப் படத்தின் பெயரையும் எழுதிக் கொண்டேன்!! பிறகு வழக்கம்போல மறந்தும் விட்டேன்.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக, திடீரென்று ஒரு நாள் இப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. வழக்கத்திற்கு மாறான படமாகவும் இருந்தது!!! 😜
ஆரம்பமே அட்டகாசமான காட்சிகள்!! அமிதாப் பச்சன், முதியோர் இல்லம் ஒன்றுக்கு ஃபோன் செய்து, 75 வயது பெரியவரான ரிஷி கபூரைச் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகிறார். அவர் உங்கள் தந்தையா என்று அவர்கள் அமிதாப்பிடம் கேட்க, அவரோ, “இல்லை, ரிஷி என் மகன்!” என்று பதிலளிக்க, ஃபோன் துண்டிக்கப்படுகிறது!! 😄
ஆம், 102 வயதான அமிதாப்பின் 75-வயது மகன் தான் ரிஷி கபூர். அப்பாவும் மகனுமாக பல வருடங்களாக ஒரே வீட்டில் தனியாக வசித்து வருகிறார்கள். ரிஷியின் மகன் அமெரிக்காவுக்குப் படிக்கப் போனதோடு அங்கேயே செட்டிலாகி விட்டார்.
அமிதாப் “கலகல” பார்ட்டி; ரிஷியோ “கம்கம்” பார்ட்டி. அவர் ஆடிப்பாடி மகிழ்ந்து இருக்க, இவர் டைம் டேபிள் போட்டு வேலைகள் செய்வார். தேவையின்றி ஒரு வார்த்தை பேசுவதும் இல்லை. ஆகவேதான் அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்கத் துணிகிறார் அமிதாப்.
வழக்கமாகப் பயன்படுத்தும் பெட்ஷீட் மாறினால் கூட தூக்கம் வராமல் தவிக்கும் தன்மையுடைய ரிஷியோ, தன்னை முதியோர் இல்லம் அனுப்ப வேண்டாம் என்று அப்பாவிடம் கெஞ்சுகிறார்!! அப்படி அனுப்பாமல் இருக்க வேண்டுமென்றால் தான் சொல்லும் 6 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமென்கிறார்.
சுவாரஸ்யமான மற்றும் அதிர்ச்சிகரமான அந்த நிபந்தனைகளை அவர் ஏற்றாரா? நிறைவேற்றினாரா? என்னவென்றாலும் ஒரு தந்தை, ஆதரவற்ற தன் வயோதிக மகனை வீட்டைவிட்டு அனுப்பத் துணிவாரா? அதற்கான பின்ணணி என்ன? என்பதுதான் கதை.
க்ளைமாக்ஸ் கொஞ்சம் எதிர்பார்த்தது போலத்தான் இருந்தது என்றாலும், படம் சுவாரஸ்யம். உடனே பார்க்கக் கிளம்பிவிடாதீங்க. ஏன்னா, வழக்கமான தமிழ்ப்படங்கள் பார்க்கிறவங்களுக்கு இந்தப் படம் போர் அடிக்கும். வித்தியாசமான படங்கள் பார்க்கும் வழக்கம் உள்ளவங்க பாருங்க.
முக்கியமாக இதில் கதாநாயகி என்று யாரும் கிடையாது!! ஏன், பெண் கதாபாத்திரங்களே கிடையாது. அப்பா, மகன், அவர்களின் உதவியாளர் என்று மூவர்தான் படம் முழுதும். எனவே டூயட் கிடையாது; வில்லன் இல்லை என்பதால் ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் கிடையாது.
அப்ப இதில் என்னதான் இருக்குது என்றால்..... வாழ்வது எப்படி என்று இருக்கிறது. முதுமையும் தனிமையும் இருந்தாலும் வாழ்க்கையை எப்படி இரசித்து வாழ்வது என்று சொல்லியிருக்கிறது. கொஞ்சம் வயசாகிட்டாலே, இனி என்ன இருக்கு என்று சலித்துக் கொள்ளும் ரிஷி கபூர் போன்றவர்களுக்கு, நூறு வயதைக் கடந்தாலும், “நான் இன்னும் 16 வருடங்கள் வாழ்வேன்” என்று சொல்லும் அமிதாப் தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.
இன்னொன்று, (நிஜ) வயது 70-ஐத் தொட்டாலும், இன்னும் எந்திரங்களாகவே நடித்துக் கொண்டிருக்கும் நம் ஊர் கதாநாயகர்களுக்கு மத்தியில், தரமான வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்தால், வயதுக்கேற்ற பாத்திரங்களில் மட்டுமே நடித்தும் மனதைக் கவர முடியும் என்பதை இப்படங்கள் நிரூபிக்கின்றன.
|
Tweet | |||
1 comments:
புத்துணர்வு விமர்சனம்...
பார்க்க வேண்டும் இந்த படத்தை..
Post a Comment