வருஷந்தோறும் மே-31 “உலக புகை எதிர்ப்பு நாள்” என்று உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) அறிவிக்கப்பட்ட தினம். (இன்னிக்குத்தான்) அட, இதெல்லாம் தெரிஞ்சிருக்கே, எப்படிங்க இப்பிடிலாம்?னு கேக்கப்படாது. இப்பத்தான் ஸ்கூல்ல, ‘ம்’ என்றால் ஒரு அஸைன்மெண்ட்’, ’ஏன்’ என்றால் ஒரு சார்ட் வொர்க்னு சொல்லி அனுப்பிடுறாங்களே. அப்படி அனுப்பப்பட்ட என் பசங்க சொல்லித்தான் எனக்கும் தெரியும்.
அப்பதான், என் பெரியவன், ”Anti tobacco day"-யின் இந்த வருஷத்துக்கான “தீம்” என்ன தெரியுமான்னு கேட்டான். இதென்ன பர்த்டே பார்ட்டியா, தீம் வச்சு கொண்டாடறதுக்கு? சிகரெட், பீடி பிடிக்கக்கூடாதுன்னு சொல்றதுக்கெல்லாம் போய் என்னடா தீம் வேண்டிக்கிடக்கு? வருஷா வருஷம் கொண்டாடப்படும் அந்த நாள், இந்த நாள் மாதிரி இதுவும் ஒரு சடங்காகிக் போச்சுன்னு புலம்பிகிட்டாலும். பதில் தெரியாததை மறைக்க முடியலை. இண்டெர்நெட்டை நோண்டிப்பாத்து, “Tobacco industry interference" - அதாவது “புகையிலைத் தொழிற்துறையின் தலையீடு” அப்படின்னு பெரியவன் சொன்னதும் என்னாது!!ன்னு ஒரு அதிர்ச்சி. ஏன்னு கேக்குறீங்களா?
பொதுவா, இந்த மாதிரி தினங்களில், மக்களாகிய நம்மளைத்தான் ”புகை நமக்குப் பகை”, ‘புகை புற்று தரும்’ன்னெல்லாம் வழக்கமா பயங்காட்டுவாங்க; இப்ப மட்டும் ஏன் அந்த தொழிற்துறையைச் சொல்றாங்கன்னு, எப்பவும் கேள்வி கேட்டே பழகிய மனசுல ஒரு கேள்வி. அதுக்கப்புறம் சுறுசுறுன்னு நெட்டை ஆராஞ்சு, பீராஞ்சு தேடினதுல கிடைச்ச விவரங்கள் கிறுகிறுக்க வைக்குது. நம்ம பாரத்தை உங்ககிட்டத்தானே இறக்கிவைக்க முடியும்... அதான்...
![]() |
அபாயத்தைக் குறிக்கும் சிவப்பு வளையத்தை நீக்கும் “சிகரெட் உலக மொட்டை பாஸ்”!! |
1987 முதல் WHO-வால் ஆரம்பிக்கப்பட்ட இந்த “புகை எதிர்ப்பு தினம்”, ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு ’மையக்கருத்து’ (theme) கொண்டு பிரச்சாரங்கள் இருக்கும். இதுவரை மேலே சொன்னதுபோல தனிமனிதனுக்குத்தான் அறிவுரை சொல்வதுபோல அந்த பேசுபொருள்கள் இருந்துவந்தன. இந்த வருஷம்தான், இந்தப் பிரச்னையின் ஆணிவேர் எங்கேன்னு (புதுசாக்) கண்டுபிடிச்சு, நேரே அதில் ஆப்படிப்பதுபோல, ”புகையிலை முதலாளிகளின் தலையீடுகள்”ங்கிற கருத்தை மையக் கருத்து ஆக்கியிருக்காங்க. இது எப்படின்னா, தமிழ்ப்பட ஹீரோக்கள், திடீரென வில்லனா மாறிட்ட தன் நண்பன்கிட்ட சண்டை போட்டுட்டு, ”என்னை இப்படி நடந்துக்க வச்சதே நீதான்”ன்னு சொல்ற மாதிரி, இந்த இண்டஸ்ட்ரியின் நடவடிக்கைகள்தான் இந்த வருஷ தீமுக்குத் தூண்டுதலா இருக்கின்றன. அப்படி என்ன செஞ்சுட்டாங்கன்னு பாப்போம்.
WHOவின் புகையிலைத் தடுப்பு வரைவு மாநாட்டில் (FCTC) 2005-ம் ஆண்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களை அதன் 175 உறுப்பு நாடுகள் அனைத்தும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், அவற்றை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு இந்தப் புகையிலை மாஃபியாக்கள் கடுமையான தடங்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால் இந்த வருஷம் பொறுத்தது போதும்னு, “இவர்களின் அதிகரித்துவரும் ஆணவம் நிறைந்த, அடாவடித்தனமான நடவடிக்கைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, தகர்ப்போம்”னு பொங்கியெழுந்துட்டாங்க!! (The campaign will focus on the need to expose and counter the tobacco industry's brazen and increasingly aggressive attempts to undermine global tobacco control efforts. )
WHO-வின் நடவடிக்கைகளை புகையிலை முதலாளிகள் தடுக்க நினைப்பதன் காரணம் வேறென்னவாக இருக்கும்? இதில் கிடைக்கும் அள்ளமுடியாத அளவுக்கான கொள்ளை லாபம்தான்!! இந்தப் பணம் தரும் பலத்தைக் கொண்டுதான் அவர்களால் தம் ராஜ்ஜியத்தை எல்லா நாடுகளிலும் உறுதியாக நிலைநிறுத்திக் கொள்ள முடிகிறது. அதைத் தக்க வைக்க என்னென்ன செய்றாங்கன்னா:
- உற்பத்தி செய்யப்படும் புகையிலைப் பொருட்களில் ஈர்க்கும்படியான, மேலும் அடிமைப்படுத்தக்கூடிய வகையில் மணங்கள், சுவைகள் சேர்ப்பது. பாக்கெட்டுகளின்மீதும் வாங்கத் தூண்டும் வகையிலானப் படங்களை அச்சிடுவது.
- சில நாடுகளில், புகைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் படங்களை சிகரெட் பாக்கெட்டில் அச்சிடுவதைப் பார்த்திருக்கலாம். ஆனால், இவையெல்லாம் சர்வதேச முதலீட்டு ஒப்பந்தங்களின்படி, சட்டபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட தம் வியாபாரத்தைப் பாதிக்கும் செயல்கள் என அந்நாடுகளின்மீது வழக்குத் தொடுப்பது.
- பால், தயிர் போன்ற பொருட்களில் “low fat" என்று எழுதப்பட்டிருப்பதைப் போல, சிகரெட் பாக்கெட்டுகளில் “less nicotine", "low tar," "light," "ultra light," "mild," "natural" என்றெல்லாம் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவையெல்லாம், தாம் புகைக்கும் சிகரெட் ஆபத்தில்லாதது என்ற எண்ணத்தை மனதில் விதைத்து, மக்களைப் புகைப்பதை விட்டுவிடாமல் இருக்கச் செய்யும் யுத்திகளாகும். பெண்களே இதன்மூலம் அதிகம் தக்கவைக்கப்படுகிறார்கள்!!
- பல நிகழ்ச்சிகளை ஸ்பான்ஸர் செய்வது; மேலும் சில இனம், மொழி, உணர்வு போன்றவை சார்ந்த குழுக்களுக்கு நிதி உதவி செய்வது - இவையெல்லாம் தம் பிரா(ண்)டுகளை மக்கள் மறக்காதிருக்கச் செய்யும் சந்தைப்படுத்துதல் தந்திரங்களாகும்.
- பல நாடுகளிலும் பொது இடங்களில் புகைபிடிக்கக் கூடாது என சட்டங்கள் இருந்தாலும், அவையெல்லாம் கடுமையாக நடைமுறையில் இல்லாததற்கும் இவர்களின் தலையீடும் காரணமா?
- பொது இடங்களிலும், ஊடகங்களிலும் விளம்பரங்கள் செய்யக்கூடாது என்றிருந்தாலும், திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் முழுமையாகத் தடை செய்யப்படவில்லை. யார் காரணமோ?
- மற்ற இடங்களில் விளம்பரம் தடை செய்யப்பட்டிருந்தாலும், விற்பனை செய்யும் இடங்களில் விளம்பரங்களுக்கு எந்தத் தடையுமில்லை. ஆகையால், அங்கே கண்ணையும் கவனத்தையும் கவர்ந்திழுக்கும் வகையில் பெரிய, நவீன விளம்பரங்களை வைத்திருப்பது. மேலும், தம் பொருட்களைக் கடையின் பிரதான இடங்களில் அடுக்கி வைத்திருப்பதும், அதற்கெனக் கடைக்காரர்களுக்கு செலவு வைக்காமல் தாமே ஏற்றுக்கொள்வதும் இவர்களின் வியாபாரத் தந்திரங்கள்.

- மிக முக்கியமாக, கடைகளில் பணம் செலுத்தும் இடத்தில் (cash counter) புகையிலைப் பொருட்களைப் பரப்பி வைத்திருப்பது. இதன்மூலம், அதுவரை வாங்காமல் தயங்கிய மனதுகளையும் தூண்டி, வலைக்குள் சிக்க வைத்தல். (impulse purchase)
- விற்பனை செய்யும் கடைக்காரர்களையும், ஏஜெண்டுகளையும் தன்வசப்படுத்தியதன் மூலமாக, புகையிலைப் பொருட்களுக்கெதிரான வரி விதிப்பு, விலைஉயர்வு போன்றவற்றை அவர்களைக் கோண்டே எதிர்த்துப் போராடச் செய்தல்.
- புகை இலைப் பயிரிடுவோர்களையும் அதிகப் பணம் கொடுத்து தம் கைக்குள் வைத்திருப்பதன்மூலம், அவர்கள் தம் நிலங்களில் வேறு உணவுப் பயிர்கள் பயிரிடாமல் தடுத்தல்; இதன்மூலம் உணவுப் பற்றாக்குறை என்கிற விளைவையும் ஏற்படுத்துவது.
- புகை எதிர்ப்பு நடவடிக்கைகளை, ‘தனி மனித உரிமையில் தலையிடுதல்’ என்றும், ‘உரிமை மீறல்’ என்றும், ‘வணிக விதிகளை மீறுகிறார்கள்” என்றெல்லாம் கருத்து தெரிவிப்பதன்மூலம் மக்களை குழப்புதல்.
- இப்படிப் பல தரப்பு மக்களையும் - பயிரிடுபவர்கள் தொடங்கி, வணிகர்கள், பணியாளர்கள், பயனீட்டாளர்கள்- எல்லாரையும் தமக்குச் சாதகமாகப் பேச வைப்பது. (தமிழ்நாட்டில் ‘டாஸ்மாக்’க்கை இப்ப மூடப்போறோம்னா, முதல் எதிர்ப்பு யாரிடமிருந்து வரும்? அதப் போலத்தான்)
|
|
|
இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும்விதமாக இன்னொன்று செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்: தம் புகைப் பொருட்களைப் பயன்படுத்த சிறுவர்களைக் குறிவைத்திருப்பது!! சிறுவர்களைக் கவரும்வண்ணமாக, மிட்டாய் வடிவத்தில் நிகோடின் கலந்த புகையில்லாப் புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்வது - அதாவது smokeless nicotine candies!!
![]() |
சிகரெட் மிட்டாய்கள்!! |
இன்னும், சிகரெட் போன்ற விளைவுகளைத் தரும் “Little cigar”-ம் சிறுவர்களுக்காகவே தயாரிக்கபடுகிறாது. மட்டுமல்லாமல், விளம்பரங்களையும் அவர்களுக்குப் பிடித்த கார்டூன் கேரக்டர்கள், பிடித்த நடிக, நடிகையரை வைத்துத் தயாரித்தல் என்று இப்போது அபாயகரமாக நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பது. விளம்பரங்களின் விளைவுகளைச் சொல்லித்தான் தெரியணுமா நமக்கு?
சிகரெட், பீடி, சிகார், நிகோடின் கலந்த மிட்டாய் போன்றவை போதைப் பொருட்கள் போல தடை செய்யப்பட்டதுமல்ல. மதுவைப் போல பிரத்யேக கடைகளில் மட்டுமே கிடைப்பதுமல்ல. எல்லாமே எங்கேயும் கிடைக்கும்படி, சட்டபூர்வமாக விற்கப்படும் பொருட்களே. மேலும், பொது இடங்களிலும், ஊடகங்களிலும் காண்பிக்கப்படும் பிரபலமானவர்களின் புகைப் பழக்கமும், இளைய சமுதாயத்தின் மனதில் இது ஒன்றும் தவறான பழக்கமல்ல என்ற எண்ணத்தை விதைக்கின்றது. இன்னும் சொல்லப்போனால், குடி, போதை போன்றவற்றையா செய்கிறோம், ஆஃப்டரால் சிகரெட்தானே என்ற அலட்சியமான எண்ணம் விளையும்படியான சூழல்தான் நாட்டில் நிலவுகிறது. ஆனால், இதுவே மற்ற கெட்ட பழக்கங்களையும் நாளடைவில் கொண்டுவந்துவிடலாம் என்பது அப்போது புரிவதில்லை.
புகைப் பண முதலைகளின் மேற்சொன்னதுபோன்ற நடவடிக்கைகளாலும் கொடூர விளைவுகள் தரும் புகைப்பழக்கத்தை ஒழிக்க முடியாமல் திணறுகிறோம். சிலருக்கு தனிமனித ஒழுக்கம் இருந்தாலும்கூட, மனக்கட்டுப்பாட்டைத் தகர்க்கும்விதமான தூண்டுதல்கள் உலகில் நம்மைச் சுற்றி இருக்கும்போது, மனிதனும் சலனப்பட்டுத்தான் போவான். வளர்ந்த மனிதர்களாலேயே இந்தச் சலனங்களை எதிர்த்துப் போராட முடியாமல் அடிமைப்பட்டுவிடும்போது, சிறுவர்கள் எம்மாத்திரம்?
புகையிலைப் பழக்கம் விளைவிப்பது, தனிமனிதனை மட்டும் பாதிக்கும் உடல்நலக் கேடு மட்டுமல்ல; நம் சமூகம், சுற்றுச்சூழல், பொருளாதாரம் எல்லாவற்றிற்குமேதான் பெருங்கேடு!! எனும்போது, பாதிப்பில்லா உலகத்தை ஒவ்வொரு மனமும் விரும்பவே செய்யும். அது நம் உரிமையும்கூட. இதுபோன்ற சாத்தான்களின் பிடியில் இருக்கும் இந்த உலகத்தை மீட்டெடுப்போம் - எப்படி??!!
Ref:
http://www.who.int/tobacco/surveillance/policy/country_profile/ind.pdf
http://webbbs.mingdao.edu.tw/~foo/www6/g.htm
http://www.tobaccofreekids.org/content/what_we_do/industry_watch/warning_to_parents
|
Tweet | |||